
திருகோணமலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது
திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீன குடா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திலீபனின் 36 வருட நினைவேந்தலை முன்னிட்டு திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, குறித்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் பகுதியில் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல தரப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்று திங்கட்கிழமை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.