பெண் பயணி விமானத்தின் கழிவறையில் இருந்தபோது திடீரென கதவைத் திறந்த இணை விமானி!
இண்டிகோ விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கதவைத் திறந்த இணை விமானி “ஓ” என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடி விட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில், தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில், விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.