அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI, தனது ஊழியர்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது. FBIJobs.gov என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தில் அனுமதியற்ற நடவடிக்கை இடம்பெற்றதாகவும், அதன் மூலம் ஊழியர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் FBI தெரிவித்துள்ளது.
ShinyHunters என்ற சைபர் குற்றக் குழு, FBI-யின் இணைய அமைப்பை ஊடுருவி ஆயிரக்கணக்கான தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களின் தகவல்களை திருடியுள்ளதாகக் கூறியுள்ளது. முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஹேக்கர்களின் இந்தக் கூற்றுகள் அனைத்தும் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, FBIJobs.gov இணையதளம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது தாக்குதல் FBI-யின் சொந்த கணினி அமைப்பிலா அல்லது இணையதளத்தை ஆதரிக்கும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் அமைப்பிலா இடம்பெற்றது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என FBI தெரிவித்துள்ளது. சம்பவத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்காக தொடர்புடைய மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் FBI குறிப்பிட்டுள்ளது.










