கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்-

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய குடும்பஸ்தர் சந்தேகத்திற்கிடமாக நடமாடி வருவதாக கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக்கிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது போதை ஒழிப்பு பிரிவில் உள்ள உப பொலிஸ் பரிசோதகர்களான முஸ்தபா மற்றும் குமாரசிங்க ஆகியோர் இணைந்து இச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் 5000 மில்லி கிராம் நாட்டு கஞ்சா சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டது.

அத்துடன் கைதான சந்தேக நபர் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.