விரைவில் தானிய மற்றும் உர ஏற்றுமதி ஆரம்பம்
பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. போர் தொடங்கி 9 மாதங்களை நெருங்க உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இரு நாடுகளிலும் இருந்து தானியம் மற்றும் உரங்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
தானிய மற்றும் உர உற்பத்தியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் முன்னணியில் இருக்கும் நிலையில் போரால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், உலக நாடுகளில் உரம் மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாடு உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது. தட்டுப்பாட்டால் உணவு மற்றும் உரத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
மேற்குலக நாடுகளிலும் ஆப்பரிக்க நாடுகளிலும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐநா சபையின் முயற்சியால் கடந்த ஜூலை 22ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வைத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் தானியம் மற்றும் உரப்பொருட்கள் ஏற்றுமதி செய்ய இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.
இதை தொடர்ந்து உக்ரைன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதிக்கு தயாரானபோது, ரஷ்யா அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுமதிக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் கிரீமியா பகுதியில் இருக்கும் கருங்கடல் துறைமுகத்தில் தங்களது போர் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இது ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல் எனக் கூறி, கருங்கடல் பகுதிகளில் உக்ரைன் கப்பலை பார்த்தால் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என ரஷ்யா அறிவித்தது.
இதனால் உக்ரைனில் இருந்து உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தால் தானிய ஏற்றுமதி மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில் ஐநா சபையின் மனிதாபிபான நடவடிக்கைகள் பிரிவின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவர் ரெபேக்கா கிரின்ஸ்பேன் ஆகியோர் ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
உணவுப்பொருள் மற்றும் உரப்பொருட்களின் ஏற்றுமதியின் அவசியம் குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தினர். ரஷ்யா மீது ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளால் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளால் கப்பல் போக்குவரத்து, ஏற்றுமதிக்கான காப்பீடு உள்ளிட்டவைகள் பெறுவதில் இருக்கும் சிரமங்களை ரஷ்ய தரப்பு சுட்டிக்காட்டியது.
அந்த தடைகள் விலக்கப்பட வேண்டும் எனவும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஜூலை 22 ஆம் தேதி ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தம் வரும் நவம்பர் 19 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், வளரும் நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டு இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் விரைவில் நீட்டிக்கப்பட வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. நல்ல காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றன உலக நாடுகள்…