கல்முனையில் தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துப் பொருட்கள்!

-அம்பாறை நிருபர்-

காலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த, கல்முனையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 100,000 ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு, அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன், குறித்த வைத்தியசாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கானது, நேற்று வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் குறித்த வழக்கு சம்பந்தமாக மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.