
பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர பாதுகாப்பு ஆலோசனைகள்
நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ வேலைக்குச் சேரும் நபர்கள், பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைச் சரிபார்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், புதிய பணியாளர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறியத்தருமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
