மீண்டும் முட்டை தட்டுப்பாடு : கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி சோதனை
சந்தையில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியில் தான் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, முட்டை கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் பிரகாரம், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்கள் மற்றும் கையிருப்பை மறைத்து வைப்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் திகதி முட்டைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு வெள்ளை முட்டை அதிகபட்ச சில்லரை விலை 44 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 46 ரூபாய்க்கும் விற்க வேண்டும் என அரசு அறிவித்தது.
இந்த விலைக்கு மேல் முட்டையை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு சாதாரண கடைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும், பெரிய வியாபார நிலையத்திற்கு 5 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் முட்டையின் விலை குறையலாம் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.