யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீட்க முடியும் -ஜனாதிபதி-

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீட்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு மேலும் கருத்துத்தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சிறப்புமிக்க சேவை விபூஷண பதக்கங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இன்று அதனை வழங்கினோம். மேலும், 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த சேவை விருதுகள் வழங்கப்பட்டன. இன்று பதக்கம் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம்.

இந்த நிகழ்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முதலாவது நிகழ்வாகும். முப்படைகளுக்காக இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் நேச நாடுகளுக்கு ஆதரவாக 02 நாடுகள் இருந்தன. அதில் ஒன்று சீனா. மற்றொன்று இலங்கை. இலங்கையில் மட்டுமே சர்வசன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்கத்துறை இருந்தது.

நாட்டின் பாதுகாப்புக்காக நமது பாதுகாப்புப் படையினர் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். நமது இராணுவம் உலகப் போரின் போதே ஆரம்பிக்கப்பட்டது. அது உலகில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தது. இரண்டாவது யுத்தம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகவே நடைபெற்றது. அதற்காக நமது இராணுவம் உயிர் தியாகத்துடன் செயற்பட்டது.

ஒரு குடியரசாக நாடு சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நமது பாதுகாப்புப் படைகள் ஆற்றிய இந்த உன்னத சேவையை நாம் நினைவுகூர வேண்டும். அதனால் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முதல் விழாவை முப்படையினருக்காக நடத்த முடிவு செய்தேன்.

நமது முப்படைகள் இப்போது இலங்கையில் மட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையாகவும் செயல்படுகிறது. எதிர்காலத்தில் இந்த அமைதி காக்கும் படைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இப்போது மீண்டும் ஒரு போர் நடக்கும் போது, 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். அது துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் போர் அல்ல இன்று நாம் ஒரு பாரிய பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இன்று நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவிட்டால், இந்த கடன் பொறியில் இருந்து விடுபடாவிட்டால், எமது நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போய்விடும். நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை.

இன்று உலகின் பொருளாதார சக்திகளிடம் நாம் சரணடைய முடியாது. எனவே இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா நியூலேண்ட் இன்று என்னைச் சந்தித்தார். நாங்கள் முன்னெடுக்கும் இந்த பொருளாதார திட்டத்திற்கு அமெரிக்க அரசு முழு ஆதரவை வழங்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இந்தக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எங்களால் நிறைவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்பாட்டை நாம் பெற்றபோது, அதை உலகமே ஏற்றுக்கொண்டது.

இந்த வருட இறுதிக்குள் இதைவிட சிறந்த பொருளாதார நிலை உருவாகும் என்று நான் நம்புகிறேன். அதனோடு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்க வாய்ப்புக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதிலிருந்து நாம் வெளியேற முடியாது. நாம் சரியான பாதையில் செல்வதாக இருந்தால், நாம் மதிநுட்பத்துடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் வெற்றியை அடைய முடியும்.

பயங்கரவாதப் போருக்கும் பொருளாதாரப் போருக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அன்று உயிர்கள் பறிபோயின. இன்று வருமானம் இழந்துள்ளது. அதுதான் வித்தியாசம். இழந்த உயிர்களை மீண்டும் வழங்க முடியாது. ஆனால் இழந்த வருமானத்தை மீட்டெடுக்க முடியும். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம்.

நாம் பெற்ற அரசியல் சுதந்திரம் மற்றும் நாங்கள் பாதுகாத்த பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் பொருளாதார சுதந்திரத்துடன் முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.