“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், கடந்த குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளரும் நிதி மற்றும் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதி சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரஸல் அபொன்சு,கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க , வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சி. அமரசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) தர்ஷன எம். பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.