
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஐ தாண்டியது
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 28,000ஐ தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எடுவான் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஆனால் தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணிக்குழுவினரும் தங்களது பணிகளை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு மற்றும் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தன்னார்வ மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளதாக சிரியா சிவில் டிஃபென்ஸ் (வெள்ளை தலைக்கவசம்) அமைப்பு தெரிவித்துள்ளது.
108 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, இடிபாடுகளுக்கு அடியில் யாரும் உயிருடன் இல்லை என்று நம்புவதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
2011 ஆம் ஆண்டு முதல், சிரியா கிளர்ச்சியாளர் போரினால் பேரழிவிற்குள்ளானது, இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்த பகுதிகளில் வாழும் 04 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாதிக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், சிரியாவில் 5.3 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி, தங்குமிடம் போன்றவை தேவைப்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
நாட்டின் அரசியல் கட்டமைப்பை சிக்கலாக்கும் வகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பெரும்பகுதி துருக்கி மற்றும் அமெரிக்க ஆதரவு எதிர்ப்புப் படைகள், குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய போராளிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது மனிதாபிமான உதவியை அணுகுவதை கடினமாக்கியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள ஒரே நடைபாதையான பாப் அல்-ஹவா கிராசிங்கைக் கடக்க, ஐ.நா மனிதாபிமான உதவித் தொடரணிக்கு மூன்று நாட்கள் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் நேற்று சனிக்கிழமை லதாகியாவில் உள்ள வைத்தியசாலையில் காயமடைந்தவர்களை பார்வையிட்டனர்.
இவ்வாறான அனர்த்தத்தில் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் தமக்கு கிடைக்கவில்லை என சிரிய ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர், காலநிலை மற்றும் நெருக்கடி இயக்குநர் கரோலின் ஹோல்ட்டின் கூற்றுப்படி, துருக்கியில் மீட்புப் பணிகள் முடிவடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம், மேலும் சிரியாவில் 5-10 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளார். .
சிரிய-அமெரிக்க நடிகர் ஜே அப்டோ சிஎன்என் ஊடகத்திடம், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு ஏமாற்றமளிப்பதாகவும், நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, ஜேர்மனியர்களும் ஆஸ்திரியர்களும் தங்கள் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திய பின்னர், கொள்ளையடித்ததற்காக துருக்கி கிட்டத்தட்ட 50 பேரை கைது செய்துள்ளது.
சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தப்போவதாக துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.
