இந்தோனேஷியாவில் ரிக்டர் 7.6 : சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.17 மணிக்கு ரிக்டர் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவானது.

இந்தோனேஷியாவின் அம்பன் தீவிலிருந்து 427 கிலோமீட்டர் தொலைவில், 95 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

திமோர், மலுகு, பப்வா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சில கட்டடங்கள் நிலநடுக்கத்தால் ஆடின. இதேபோல, ஆஸ்திரேலியாவிலும் டார்வின் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. கடும் நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர். எனினும், சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை இல்லை. ஜாவா தீவுப் பகுதியில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 602 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.