DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க மாலைத்தீவு நோக்கிப் புறப்பட்டது சுரனிமில கப்பல்

இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஜனவரி 14 கொழும்பு துறைமுகத்திலிருந்து மாலைத்தீவின் தலைநகரான மாலேவுக்குப் புறப்பட்டது.

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேயில் நடைபெறும் இந்தக் கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில பங்கேற்பது மூலம், இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவிற்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் உறுதுணையாக இருக்கும்.

மேலும், பிராந்திய கடற்படைகளை உள்ளடக்கிய இத்தகைய கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், இலங்கை கடற்படை பிராந்திய கடற்படைகளுடன் இணைந்து செயல்படக்கூடிய தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, புதிய சவால்களை அடையாளம் காண்பது, கூட்டாக தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்க முடிவது போன்ற பல நன்மைகள் கிடைக்கப்பெறும்.