அடித்தால் பிள்ளை ஒழுக்கமாக வளரும்?

உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச நாள், ஆங்கிலத்தில் International Day to end Corporal Punishment என சொல்லப்படுகின்றது

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அன்று உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாளின் அவசியம் என்ன?

பொதுவான இந்த தினத்தின் மூலம் வலியுறுத்தப்படுவது சிறுவர்கள் மீதான உடல்ரீதியான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்பதே

சிறுவர்களுக்கு உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனை என்பது சிறுவர்களுக்கு எதிரான வன்முறையின் மொத்த வடிவமாகும்.

இது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. குறிப்பாக பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு மற்றும் வீடுகளில் இவை அதிகமாக நிகழ்கின்றன.

பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், உடல் ரீதியான தண்டனைகள் நேர்மறையான தாக்கங்களை ஒருபோதும் உண்டாக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மாறாக நீண்ட கால மற்றும் வாழ்நாள் முழுவதும் தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான விளைவுகளை தான் இவ்வாறான தண்டனைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இவ்வாறு சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவது அவர்களது உடல் உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், மேலும் அறிவாற்றல் மற்றும் நடத்தையில் ஆக்கிரமிப்பு செய்வதோடு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், உலகில் உள்ள 2.2 பில்லியன் குழந்தைகளில் 86% ஆன குழந்தைகள் இந்த நடைமுறையில் இருந்து சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படவில்லை என தகவல்கள் சொல்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளில், உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் நாடுகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 65 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்விடயத்தில் இலங்கையை பற்றி பார்க்கையில் இலங்கையில் சிறுவர்கள் மீதான உடல் ரீதியான கண்டனை அதிகரித்து காணப்படுவது உண்மை.

இலங்கையில் குறைந்தபட்சம் 80மூ பாடசாலை மாணவர்கள் பாடசாலையில் உடல் ரீதியான தண்டனையை ஒரு முறையாவது அனுபவித்திருக்கிறார்கள், என தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் (National Child Protection Authority) அறிக்கை தெரிவிக்கின்றனது.

உடல் ரீதியான தண்டனை ஒழுக்கம் அல்ல – அது வன்முறை.

இது குழந்தைகளின் கண்ணியத்தைப் பறிக்கிறது, அவர்களின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒரு தீய சுழற்சியை நிலை நிறுத்துகிறது.

இலங்கையில் பாடசாலைகளில் ஆசிரியர்களால் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்குள்ளாகும் சிறுவர்களின் நிலை மாறவே இல்லை என்பதே உண்மை

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் செய்திகள் இவற்றிற்கு சாட்சி. ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளில் ஒன்றாக சிறுவர்களை அடித்து தண்டனை கொடுப்பது கவலைக்குரிய விடயம்

இவ்வாறான தண்டனைகள் பிள்ளைகளின் கற்றல் திறனையோ அல்லது அறிவையோ மேம்படுத்தாது, மாறாக வன்முறை எண்ணங்களையும், வெறுப்புணர்வையுமே உருவாக்கும்

அதேபோன்று வீடுகளில் இடம்பெறும் குடும்ப வன்முறைகளின் போதும் ஒன்றுமறியா சிறுவர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அதிகரித்து காணப்படுகின்றது.

பெற்றோர்கள் தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் காரணமாக குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்துவது மற்றும் அவர்களுடைய உயிரை பறிப்பது போன்ற கொடுமையான சம்பவங்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மலிந்து காணப்படுகின்றது.

சிறுவர்களை பாதுகாப்பதற்கான போதிய அளவு சட்டங்களும் நடைமுறைகளும் இலங்கையில் இருக்கிறது என்பதை சேவ் த சில்றன் (Save the Children) அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

எனினும் சமூகம் சார்ந்து பார்க்கையில் சிறுவர்கள் மீதான உடல்ரீதியான தண்டனைகள் குறைந்தபாடில்லை . சமூகத்தின் தவறான புரிதல்களும் இதற்கு ஒரு காரணம் என் சொல்லலாம்.

“அடியாத பிள்ளை படியாது” என்று ஒர் பழமொழி நம் சமூகத்தில் இருக்கிறது. அடித்தால் தான் பிள்ளை சீராக வளரும் என்று பிள்ளையை அடித்து வளர்க்க முனைகிறார்கள் பெற்றோர்கள்.

ஆனால் தவறான புரிதலுக்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த பழமொழி. “அடியாத பிள்ளை படியாது'” என்பதல்ல அது “அடியாதே, பிள்ளை படியாது”  என்பதே சரியான வாக்கியம். பிள்ளையை அடிக்காதே அடித்தால் பிள்ளை பணிவான ஒழுக்கமான பிள்ளையாக வளராது என்பதே அதன் அர்த்தம்.

 

-சபீனா சோமசுந்தரம்-
(Writer, Journalist, Dip.in Psychology)

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்