மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் : ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று செவ்வாய்க்கிழமை அமுல்படுத்தியுள்ளார்.

அபிவிருத்தி குழு கூட்டத்தில் இடம்பெறும் விடயங்களை ஊடகங்கள் தனித்துவமான முறையில் இதுவரை காலமும் வெளிகொண்டு வந்திருந்த நிலையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இது தொடர்பில் முறுகல் நிலை நிலவி வருகின்றது.

இதனையடுத்து எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இருப்பவர்களை மாத்திரம் அனுமதிக்கப்பட்டு கடந்த சில காலங்கலாக இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

எனினும் புதிதாக இடம்மாற்றம் பெற்று வந்திருக்கும் அரசாங்க அதிபரினால் முதல் முறையாக இடம்பெறும் குறித்த கூட்டத்தில் எந்தவொரு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இடம்பெறும் விடயங்கள் மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு அனுப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.