காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை
அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

வெல்கம் விகாரை வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 65 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த இடத்துக்கு விரைந்து அங்கு வேலி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பல வருட காலங்களாக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு இன்னமும் காணித் துண்டுகள் அரசினால் வழங்கப்படாத நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற செல்வந்தர்களுக்கு வனப்பகுதிகள், காணிப்பகுதிகள் என்பன தாரைவாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தம்மால் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதற்கு அரச அதிகாரிகளும் அப் பகுதியில் உள்ள விகாரையின் விகாராதிபதியும் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டினர்.

குறித்த வனப்பகுதியில் தமது தேவைக்காக விறகு வெட்டச் சென்ற போது பலதடவைகளில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது பாரிய மரங்களை வெட்டி வேலி அமைப்பதற்கு எவ்வாறு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்