
கண்டல் காட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் ஆலங்கேணி அம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் வீதி ஓரத்தில் இருந்து சுமார் 10 மீற்றர் தொலைவில் உள்ள கண்டல் காட்டு பகுதியில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் கலால்தீன் (51வயது) எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர் அவ் இடத்திற்கு அருகாமையில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கடந்த 8 வருட காலமாக வேலை பார்த்து வந்தவர் எனவும், அப்பண்ணையிலேயே இரவு நேரத்திலும் தங்குவதாகவும் அவருடன் வேலை பார்த்தவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
குறித்த பண்ணையில் அவருடன் வேலை பார்த்து வந்த நபர் நள்ளிரவுக்கு பின்னர் அவரை காணவில்லை எனவும் வெளியில் தேடிய போது அவரது செருப்பு மாத்திரம் வீதியோரத்தில் இருந்ததை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளார்
இதே வேளை குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த நபர் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர் எனவும், 20 வருட காலமாக ஆலங்கேணி பகுதியில் இரண்டு இடங்களில் கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
