
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எண்ணையை விற்பனை செய்த சுங்க அதிகாரி கைது
தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்க கண்காணிப்பாளர் ஒருவர், அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பனை எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
உணவு மற்றும் மருந்து ஆய்வாளரால் மனித நுகர்வுக்கு உகந்ததல்ல எனக் கருதப்பட்ட ஐந்து கொள்கலன் பனை எண்ணெய், சுங்க கட்டளைச் சட்டத்தின் 109 ஆம் பிரிவின் கீழ் அழிக்கப்படுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை, விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும், சந்தேக நபர் அந்தக் கொள்கலன்களை எடுத்துச் சென்று, ஒரு கொள்கலனில் இருந்த பனை எண்ணெயை சுமார் 4 மில்லியனுக்கு ரூபாவுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர், அசல் பதிவேடுகளைத் தன்வசம் வைத்துக்கொண்டு, கையிருப்பு அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
பிலியந்தலஇ சித்தமுல்லவைச் சேர்ந்த சந்தேக நபர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
