திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது , ஈச்சலம்பற்று கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 318 பயனாளர்களுக்கும், குச்சவெளி கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 88 பயனாளர்களுக்குமாக மொத்தம் 406 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்மூலம், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 968 பண்ணையாளர்களுக்கு, மொத்தமாக சுமார் 557 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர், அரச கால்நடை வைத்தியர்கள் மற்றும் அரச கால்நடை போதனாசிரியர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.