திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

-கிண்ணியா நிருபர்-

தொழில்சார் கல்விப் பிரிவின் விதி முறையான, கவர்ச்சிகரமான நிறுவன முறைமையை கட்டி எழுப்புவதற்காக, “ஊழிய செயற்பாடு” என்ற தொனிப்பொருளின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் டி. பாஸ்கரராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தொழில்நுட்பக் கல்லூரியின் அலுவலக சுற்றாடல் பகுதிகள், அலுவலகங்கள், வகுப்பறைகள், பயிற்சிக் கூடங்கள் என அனைத்தும் ஒழுங்குபடுத்தி தூய்மைப்படுத்தப்பட்டது.

இதனை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டனர். காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் குறித்து தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 311 தொழில் பயிற்சி நிலையங்களில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகம் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை எமது தொழில் பயிற்சி நிலையத்திலும் இன்று ஆரம்பித்து உள்ளோம்.

அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இந்தத் திட்டத்தை எமது நிறுவனத்தில், வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

அந்தக் குழுவில் கல்விசார் உத்தியோகத்தர்கள், கல்வி சாரா உத்யோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்தக் குழுவின் ஊடாக இன்று, முக்கியமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம், என இதன்போது தெரிவித்தார்.