தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் சந்திக்கப்போகும் சவால்கள்..?

– இரா. துரைரத்தினம்-

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் சந்திக்கப்போகும் சவால்கள்.

தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெற்றிவாய்ப்பை இழந்த சுமந்திரன், கட்சி செயற்பாடுகளில் சிறிதரனுக்கு பக்க பலமாக செயற்படுவார்கள் என நம்புகிறேன், இதேவேளை வடக்கில் தனிப்பெரும் கட்சியும் 75 வருட வரலாற்றைக்கொண்டதுமான தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறிதரன் சில விடயங்களை மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
அவரின் முன்னே பல சவால்கள் காத்திருக்கின்றன.

அந்த சவால்களை வெற்றி கொள்ளாவிட்டால் தமிழரசுக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி அழிந்து போய்விடும்.

முதலாவது ஏற்கனவே தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்திருந்த ஒட்டுக்குழுக்கள் ஒற்றுமை என்ற பெயரில் மீண்டும் வந்து சேர்வதற்கு முயற்சிப்பார்கள். அப்படி அந்த ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து தேர்தல் நடவடிக்கையில் கூட்டாக செயற்பட்டால் தமிழரசுக்கட்சி அழிந்து போய்விடும்.

தமிழரசுக்கட்சியின் ஆதரவுத்தளம் குறைந்ததற்கு முக்கிய காரணம் ஒட்டுக்குழுக்களை சேர்த்ததுதான். 2009 வரை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்திருந்து தமிழ் மக்களை அழித்த புளொட் இயக்கத்தை 2013ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்த்ததால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலரை புளொட் இயக்கம் தன்னுடன் சேர்த்துக்கொண்டது. இப்போது அவர்கள் புளொட் இயக்கத்தின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களாக உள்ளனர்.

உதாரணமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளரான தர்சானந்தன் யாழ். மாநகர சபை தேர்தலில் புளொட் இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வட்டாரத்திலேயே போட்டியிட்டார். அதன் பின் அவரை புளொட் இயக்கம் முழுமையாக உள்வாங்கி கொண்டது. இப்போது அவர் புளொட் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர். அது போன்று வடமாகாணசபை தேர்தலிலும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரை புளொட் இயக்கம் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. அவர்கள் இப்போது புளொட் இயக்க உறுப்பினர்களாக மாறிவிட்டனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரெலோவுக்கு தாரை வார்த்ததால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலர் ரெலோவின் உறுப்பினர்களாக இன்று மாறிவிட்டனர். மட்டக்களப்பு மாநகரசபையில் கல்லடி வேலூர் வட்டாரம் ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் தமிழரசுக்கட்சி ஆதரவாளரான ஜெயா நிறுத்தப்பட்டார்.

இப்போது ஜெயாவை ரெலோ முழுமையாக தங்களுக்குள் உள்வாங்கி கொண்டது. கடந்த உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட போது ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாமல் தமிழரசுக்கட்சி வேட்பாளராக நிற்பதற்கு சம்மதித்தால் ரெலோ சுட்டு விடுவார்கள் என ஜெயாவின் குடும்பத்தினர் கூறியதை நான் அறிவேன்.

இப்படி ஒட்டுக்குழுக்களை தமிழரசுக்கட்சி தன்னுடன் சேர்த்து வைத்திருந்ததால் மிகப்பெரிய பாதிப்பை தமிழரசுக்கட்சி சந்தித்தது.

தமிழரசுக்கட்சி தலைவராக தெரிவாகியிருக்கும் சிறிதரன் கடந்த கால படிப்பினைகளை கருத்தில் கொண்டு ஒட்டுக்குழுக்களை வாசல் படிக்கும் எடுக்காமல் இருக்க வேண்டும். ஒற்றுமை என்ற பெயரில் தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்ய வரும் ஒட்டுக்குழுக்களை தன்னுடன் சேர்ப்பாராக இருந்தால் தமிழரசுக்கட்சி முற்றாக அழிந்து விடும்.

சிறிலங்கா புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்கி கொண்டிருக்கும் வெளிநாடுகளில் உள்ள சருகுப்புலிகளின் கைப்பொம்மையாக சிறிதரன் செயற்பாடுவாரானால் தமிழரசுக்கட்சி அழிவை நோக்கியே செல்லும்.

வெளிநாடுகளில் உள்ள நெடியவன் தலைமையிலான புலிகள் என சொல்லிக்கொள்பவர்களை இயக்குவது சிறிலங்கா புலனாய்வு பிரிவுடன் தற்போது கொழும்பில் இருக்கும் நந்தகோபன். சிறிலங்கா புலனாய்வு பிரிவின் நோக்கம் தமிழ் மக்களுக்கு பலமான அரசியல் தலைமை இருக்க கூடாது என்பதாகும்.

எனவே சிறிலங்கா புலனாய்வு பிரிவின் கட்டளையின் கீழ் இயங்கும் நெடியவன் தலைமையிலான குழுவின் கைப்பொம்மையாக சிறிதரன் செயற்பட்டால் தமிழரசுகூக்கட்சி முற்றாக அழிவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக சிறிதரன் காட்ட முற்பட்டால் விடுதலைப்புலிகளை இன்னமும் தடை செய்து வைத்திருக்கும் மேற்குலக நாடுகளிடமிருந்து தமிழரசுக்கட்சி அந்நியப்பட வேண்டி வரும். இந்த இராசதந்திரத்தை சிறிதரன் சரியாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் கட்சியான தமிழரசுக்கட்சி இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படாவிட்டால் அழிந்து போவதை தவிர்க்க முடியாது.

தமிழரசுக்கட்சிக்கான போட்டி அறிவிக்கப்பட்ட பின்னர் சிலர் மிகக்கேவலமான பிரசாரங்களை செய்தனர். இவர்களை இனி கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதை தடுக்க முடியாமல் இருக்கும்.

இதுவரை காலமும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டவில்லை என்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அம்மக்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கு பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

யாழ். குடாநாட்டிற்கு இரணைமடு குளத்தில் இருந்து தண்ணீர் கொடுப்பதை தடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இனிமேல் இவைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
சிறிதரன் இந்த சவால்களை வெற்றி கொண்டு தமிழரசுக்கட்சியை தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தக்க வைத்துக்கொள்வாரா? அவரின் முன் கடினமான சவால்கள் காத்திருக்கின்றன.