
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்று அமைச்சரவையில்
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மின் உற்பத்திக்கான செலவினத்தையும் கருத்திற்கொண்டு மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பரிசீலிக்க போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
இதனால் குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண திருத்தம் அதிக தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணத்தின் கீழ் அலகொன்றிற்கான கட்டணம் உள்ளிட்ட நிலையான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 0 முதல் 30 வரையில் அலகொன்றுக்கான 8 ரூபா என்ற கட்டணத்தை 30 ரூபாவாகவும் 120 ரூபா என்ற நிலையான கட்டணத்தை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையில் அலகொன்றுக்கான 10 ரூபா என்ற கட்டணத்தை 37 ரூபாவாகவும் 240 ரூபாவாக காணப்பட்ட நிலையான கட்டணத்தை 550 ரூபாவரையிலும் அதிகரிப்பதற்கு புதிய யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகொன்றுக்கு 16 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் 42 ரூபாவாகவும் 360 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 650 ரூபா வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.