“சர்வதேச சமூகத்தின் ஆலோசனையின்படி செயற்படமுடியாது”

 

போதைப்பொருள் கடத்தலுக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாளஉலகக் கும்மல்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமான காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ‘ யுக்திய ‘ நடவடிக்கையை நிறுத்துமாறு அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் கேட்டிருக்கின்ற போதிலும் சரவதேச சமூகத்தின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுவதற்கு தான் தயாராயில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் கூறியிருக்கிறார்.

சர்வதேச சமூகம் கூறுவதைக் கேட்டு நடக்கவேண்டுமாக இருந்தால் இந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருப்பதற்கு தான் தயாராக இல்லை என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

“பாதாள உலகத் தலைவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகும் சில சட்டத்தரணிகள் என்னையும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனையும் ஒழித்துக் கட்டிவிடுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.யுக்திய நடவடிக்கை மூலம் பாதாள உலகத்தை நாம் ஒழித்தக்கட்டிவிட்டால் அந்த சட்டத்தரணிகளுக்கு சம்பாத்தியத்துக்கு வழி இருக்காது என்பதாலேயே அவ்வாறு அவர்கள் பாதாள உலகத்தவர்களை கேட்டிருக்கிறார்கள்” என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

யுக்திய நடவடிக்கை மூலம் நாட்டைத் துப்புரவாக்கும் பணியை ஜனாதிபதி முழுமையாக ஊக்குவிக்கிறார் என்று கூறிய அலஸ் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடுகையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முது விபரங்களையும் கொழும்பு அதிமேற்றிராணியாருக்கும் திருச்சபைக்கும் கொடுத்திருக்கிறேன்.

அதனால் அந்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து பொலிசாரிடம் கூட இல்லாத விபரங்கள் கார்டினல் மல்கம் ரஞ்சித்திடமும் திருச்சபையிடமும இருக்கிறது. எந்த அதிமுக்கிய பிரமுகராவது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக கண்டறியப்படுமானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று கூறினார்.