50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற வர்த்தகர் கைது

50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குவதற்கும், அவரது குடும்ப உறவினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உதவியை வழங்குவதற்கும் குறித்த வர்த்தகர் இவ்வாறு இலஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.