
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பேருந்துகளில் பிஸ்கட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை!
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் மக்களை குறி வைத்து இடம்பெறும் கொள்ளை சம்பவம் தொடர்பில், மக்கள் அவதானமாக இருக்குமாறு, கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் அறிவுறுத்தியுள்ளார்.
பேருந்தில் பயணிக்கும் போது அறிமுகமில்லாதவர்களிடம் எதனையும் வாங்கி உண்ண வேண்டாம், என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில்,
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகளை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
குறித்த பேருந்தில் பயணிகள் போல் ஏறும் கொள்ளையர்கள், பேருந்தில் தனியாக பயணம் செய்யும் பயணிகளை நோட்டம் விட்டு, அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்து பேச்சுக் கொடுக்கிறார்கள்.
நட்பாக பேசிக்கொண்டே, தங்களிடம் இருக்கும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட் பக்கற் ஒன்றை எடுத்துக் கொடுத்து, அதை உண்ணும்படி கூறுகிறார்கள். அதை வாங்கி உண்ணும் பயணி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விடுகிறார்.
அதன்பின் மயக்கமடைந்த பயணியிடமிருக்கும் தங்க நகைகள், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் இறங்கி விடுகிறார்கள்
அதன்பின்னர் பேருந்தில் மயக்கமடைந்து கிடக்கும் பயணி மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் 3 நாட்களின் பின்னரே சுய நினைவுக்கு வருகிறார்
இதே சம்பவம் தொடர்ச்சியாக பல முறை இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.
அண்மைக்காலமாக இவ்வாறு கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆகவே பேருந்தில் பயணிக்கும் போது அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து எதையும் வாங்கி உண்ண வேண்டாம், உங்களுடைய பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருங்கள், என அவர் தெரிவித்துள்ளார்.
