நாட்டில் பெரும் பதவிகளில் இருந்த 45 பேர் மீது இலஞ்ச ஊழல் வழக்குகள் தாக்கல்

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் முதல், மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மேல் நீதிமன்றத்தில் 42 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் 11 காவல்துறை அதிகாரிகள் உட்பட 45 பேர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள், சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.