சென்னையில் இருந்து தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது பவதாரிணியின் உடல்

இளையராஜாவின் மகளும், பாடகியுமான மறைந்த பவதாரிணி உடல் இறுதி சடங்கிற்காகத் தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் தான் ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றிருந்தார். இருப்பினும், திடீரென அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 25ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்தார்.

பாவதாரிணியின் மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பவதாரிணி உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பவதாரிணி உடலைப் பெறுப்பேற்றுக் கொள்ள சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

விமானநிலையத்தில் இருந்து பவதாரிணி உடல் டீநகரில் இருக்கும் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உறவினர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இன்றிரவு 10 மணியளவில் பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சாலை மார்க்கமாக அவரது உடல் இளையராஜா பங்களா இருக்கும் லோயர்கேம்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். இருப்பினும், அவரது தாய் சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரின் நினைவிடம், லோயர்கேம்ப் பங்களா என்ற தோட்டத்தில் தான் உள்ளது.

அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவு நாள் உள்ளிட்ட நாட்களில் இளையராஜா அங்குச் சென்று தியானம் செய்வார். இதற்கிடையே பவதாரிணி உடலுக்கு நாளை காலை 10 மணிக்கு அங்கே இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. பவதாரிணியின் தாய் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இவரின் உடலும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இளையராஜாவின் மகளான பவதாரிணி ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அவர் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா என்று பலரது இசையில் பவதாரிணி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் வரும் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலுக்காகத் தேசிய விருதும் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் இலங்கையில் சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 47 வயதில் உயிரிழந்தார்.