லேபிள்கள் இல்லாத அழகு சாதனப் பொருட்கள் மீட்பு!
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாள குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்களைப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.
பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கட்டாயமாக இருக்க வேண்டிய லேபிள்கள் அல்லது அடையாளக் குறிகள் எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த உடல் பூச்சு கிறீம்கள் (Body Creams) மற்றும் லோஷன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் 13 வெவ்வேறு வகையான வர்த்தக நாமங்களின் (Brands) மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகூட அறிக்கையின் பின்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
