மட்டு நகரில் வகுப்பறைக்குள் நுழைந்து 9ஆம் தர மாணவன் மீது தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி – ஒலிப்பதிவு இணைப்பு –

-ச.சந்திரபிரகாஷ்-

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வகுப்பறைக்குள் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனின் தந்தையான கேதீஸ் இன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இன்று வெள்ளிக்கிழமை மெதடிஸ்த மத்திய கல்லூரி வகுப்பறையில் வழமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வகுப்பாசிரியர் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சக மாணவனின் தந்தை வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து இத்தாக்குதலை நடாத்தியுள்ளார்.

இத்தாக்குதலை அடுத்து குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் ,முதலுதவி அளிக்கப்பட்டு நண்பகல் அளவில் வீடு சென்ற நிலையில் , சம்பவம் குறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த மாணவன் உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(மாணவனின் தந்தையின் அனுமதியுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டது)

தாக்குதலில் ஈடுபட்ட நபர் மட்டக்களப்பில் நீதிமன்றில் பணிபுரியும் உத்தியோகஸ்தர் என பாதிக்கப்பட்டுள்ள மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை நேரத்தில் வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என, பெற்றோர் தமது அதிர்ப்த்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்