
மட்டக்களப்பில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாபெரும் தொழில் சந்தையொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் ஏற்பாட்டில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற இத்தொழில் சந்தையில், தொழில் வாய்ப்பின்றி காணப்படுவர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் தரமுயர்த்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் என 20 இற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் வாய்ப்பினை வழங்க முன்வந்திருந்தனர்.
இத்தொழிற்சந்தையூடாக தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள அதிகளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அ.கருணாகரன், யோ. சுகிர்தராஜா, மண்முனை வடக்கு மனித வலு உத்தியோகத்தர்களான திருமதி. தெய்வேந்திரகுமாரி, திருமதி. மகேசன் உட்பட தொழில் வழங்கும் அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




