மட்டு.வாகரையில் வேட்டைக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு : கொலை என குடும்பத்தினர் சந்தேகம்!
-கோ.டிலூக்சன்-
மட்டக்களப்பு-வாகரை பிரதேசத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்ற சிறுவன் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் நவரெத்தினராசா கிதுசன் (வயது 14) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
மட்டக்களப்பு வாகரை சின்னத்தட்டுமுனை என்ற கிராமத்தை சேர்ந்த குறித்த சிறுவன் தனது சகோதரன் மற்றும் இரண்டு அத்தான்மார்களுடன் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் குறித்த சிறுவன் துப்பாக்கி வெடித்து உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்தையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு வாகரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுவனை அவனோடு சென்ற ஒருவர் தான் சுட்டுக்கொன்று விட்டதாக தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக உயிரிழந்த சிறுவனின் உறவினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
எனினும் குறித்த சிறுவனுடன் காட்டிற்கு சென்ற ஏனைய மூவரும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் கட்டுத்துவக்கு வெடித்திருந்தால் காலில் தான் சூடு பட்டிருக்கும் ஆனால் சிறுவனின் நெஞ்சில் துப்பாக்கி சூடு பட்டிருப்பதாகவும் இந்த உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த மரணமா? அல்லது கொலையா என்று தெரிய வராத நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரையும் வாகரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்