மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவிக்கரை சீலாமுனை பகுதியில் இன்று புதன்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த த.வினோத் (வயது34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீன்பிடி தொழிலாளியான குறித்த நபர்,  கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை தற்காலிகமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த சமயம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலின் உத்தரவிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும், பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.