மட்டக்களப்பு மாணவன் உயிரிழப்பு : கல்வி அதிகாரிகளுக்கு அழைப்பாணை

மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர்,  கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆகியோருக்கு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்தில் இருந்து  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்ற முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை கடிதம் 08 ஆம் டிசம்பர் 2022 என்று திகதியிடப்பட்டு நேற்று வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் அன்று மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவன் செல்வன் சுதாகரன் வர்ஷனன், பரீட்சை பகுப்பாய்வில் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டநிலையில் தற்கொலை புரிந்தமை தொடர்பாக நீதி விசாரணையை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோகினி அமரசிங்கவின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையிட்டு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி அன்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு  வலயக்  கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்தில் முன்னிலையாகும்படி குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.