
மட்டக்களப்பை சேர்ந்தவர் போலியான கனேடிய விசாவுடன் கைது
போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் காணப்பட்ட கனேடிய விசா தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததையடுத்து விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய விசா உட்பட ஏனைய ஆவணங்களுடன் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஆவணங்கள் மீது நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் விசா போலியானது என நிரூபிக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் அவர் விசாவைப் பெறுவதற்கு ஒரு தரகரிடம் 3 மில்லியன் ரூபாவை முற்பணமாக செலுத்தியுள்ளதோடு , கனடா சென்ற பின்னர் மீதி 3 மில்லியன் ரூபாவை செலுத்த இருந்தமையும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
