
-சபீனா சோமசுந்தரம்-
(ஊடகவியலாளர் / Dip. in Psychology)
சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பின்னால் பொறுப்பற்ற சமூகம் காரணமாய் இருக்கிறது. சிறுவர்களின் உளவியல் மிக மிக மென்மையானது. அதை பக்குவமாக கையாள வேண்டும். இல்லையேல் அநியாயமாக பிஞ்சு உயிர்களை காவு கொடுத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம் தான் தற்போது மட்டக்களப்பில் பரபரப்பாக பேசப்படும 14 வயது சிறுவனின் மரணம்
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் பலரும் தமது கருத்துக்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
கோயில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனை கைது செய்த பொலிஸார் மீதும் சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்து பாதுகாப்பு இல்லத்தின் மீதும் குற்றம் சுமத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது.
உண்மையாக இந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?
தன்னுடைய மகனின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் என்று அழும் தந்தையின் அவலக்குரல் எல்லோரையும் மனம் இளக வைக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் சிறுவனின் தந்தையின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்கும் தகுதி அந்த தந்தைக்கு இருக்கிறா என்று கேட்டால் இல்லவே இல்லை.
உயிரிழந்த சிறுவனின் தந்தை என அறியப்படும் குறித்த நபர் திருமணம் முடித்து ஐந்து பிள்ளைகளை பெற்ற பின் மனநிலை சரியில்லாத மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்க விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என தெரிய வருகின்றது.
அவரின் மூத்த மகள் அதாவது உயிரிழந்த சிறுவனின் சகோதரி ‘எங்களுடைய அப்பா எங்களை விட்டு விட்டு வேறு திருமணம் செய்து விட்டார்.. எனது அம்மாவிற்கு மனநிலை சரியில்லை… அப்பா எங்களை கைவிட்டு போனதால் நான் சிறுவயதிலேயே திருமணம் முடித்து கணவன் வீட்டிற்கு வந்து விட்டேன்..’ என்று தெரிவிக்கிறார். அவருடைய வயது 23.
உயிரிழந்த சிறுவனின் மற்றுமொரு சகோதரன் சீமெந்து மூடைகள் தூக்கும் வேலை செய்து உழைக்கிறார். உயிரிழந்த சிறுவன் கூட வீதிகளில் மதுபான போத்தல்களை பொறுக்கி எடுத்து விற்பனை செய்து காசு உழைத்திருக்கிறான்.
தான் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் இப்படி அநாதரவாக விட்டு வேறொரு திருமணம் செய்த குறித்த நபர் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்பது நியாயமா? மனைவிக்கு மனநிலை சரியில்லை என்றவுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட குறித்த நபர் தனது ஐந்து பிள்ளைகளையும் பற்றியும் அவர்களுடைய எதிர்காலம் பற்றியும் சிந்திக்காமல் இருந்தது நியாயமா?
அந்த சிறுவன் தனது படிப்பை பாதியில் நிறுத்தியதற்கும் அவனுடைய வறுமை நிலைக்கும் அவனுடைய தந்தை எனப்படும் நபர் காரணம் இல்லையா?
குழந்தைகள் பிறக்கும் போது எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சமூகம் பெற்றோர் பாடசாலை சூழல் என்று பல்வேறு காரணிகள் ஆதிக்கம் செலுத்துகிறது ஒரு பிள்ளையின் உள வளர்ச்சியில்
குற்றவாளியாக்கப்படும் பெரும்பாலான சிறுவர்களின் தவறுகளுக்கு பின்னால் ஒரு வளர்ந்தவர்களின் தவறு காரணமாய் இருக்கிறது. பல்வேறு இடங்களில் பெரியவர்கள் தவறு செய்து விட்டு சிறுவர்களை மீது பழியை போடும் வழக்கம் இருக்கிறது. ஏனென்றால் சிறுவர்களின் பேச்சு சபையில் எடுபடாது.
உயிரிழந்த சிறுவனின் விடயத்திலும் இவ்வாறான ஒரு விடயம் நடந்நதிருக்கலாம் என்ற சந்தேகம் ஊர் மக்கள் சிலரிடம் இருக்கிறது.
குறித்த சிறுவனுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பூசகர் சிறுவனிடமிருந்து திருடப்பட்ட மணியை வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனினும் அந்த பூசகரிடத்தில் உதவியாளராக பணிபுரிந்த உயிரிழந்த சிறுவனை அந்த பூசகரே மணியை திருடி வரும்படி கூறியிருக்கலாம் அல்லது சிறுவன் அந்த திருட்டை செய்ய அவர் தூண்டியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது. அப்படி நடந்திருந்தால் அந்த சிறுவனின் ஏழ்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பூசகர் குற்றவாளியே. எனினும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார் சிறுவன் உயிரிழந்து விட்டான் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
அடுத்ததாக கோவில் நிர்வாகம். மதம் என்பது சட்டத்தையும் தாண்டி ஒழுக்கத்தை கற்பிக்க கடமைப்பட்டிருக்கிறது. கோவில்கள் புனிதமானவை. ஆண்டவன் குடியிருக்கும் வீடு. ஆனால் அந்த கோவில்களில் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன.
இதுவே அந்த கோவிலில் நிர்வாகத்தில் அங்கத்துவராக இருக்கும் ஒருவரின் வீட்டு பிள்ளையோ அல்லது கோவிலிற்குள் முன்னுரிமை கொடுக்கப்படும் உயர்ந்த சாதியிலும் பணபலத்தோடும் இருக்கும் ஒரு குடும்பத்து பிள்ளையோ இவ்வாறு கோவிலில் இருந்து மணியை எடுத்திருந்தால் கோவில் நிர்வாகம் என்ன செய்திருக்கும்?
“அந்த மணியை தொட்டுப்பார்க்க எடுத்திருப்பான்.. அந்த மணியை ஆராய்ச்சி செய்ய எடுத்திருப்பான்… உண்டியலில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று உறுதி செய்ய உண்டியலை உடைத்திருப்பான் …” என்று நியாயப்படுத்தியிருப்பார்கள் என்பதே வேடிக்கையான உண்மை!
ஆனால் இங்கு திருடியது ஏழை குடும்பத்து பிள்ளை. அதுவும் தகப்பன், தாய் என கட்டிக் கேட்க யாரும் இல்லாத பிள்ளை என்றவுடன் தாங்கள் அனைவரும் யோக்கியர்கள் என காட்டி சிறுவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
அங்கு சிறுவனின் தவறை கோவில் நிர்வாகம் தண்டிக்காமல் விட்டால் அவன் பிற்காலத்தில் சமூகத்தில் பெரிய குற்றவாளியாக உருவாகக்கூடும் என பலர் சொல்லலாம்.
ஆனால் நாட்டு நடைமுறைகள் அறிந்த மனிதர்களே கோவில் நிர்வாகத்தில் இருக்கிறார்கள் அதோடு தமது ஊரில் உள்ள அந்த சிறுவனின் நிலை அந்த கோவில் நிர்வாகத்தில் இருந்த ஒருவருக்கு கூடவா தெரிந்திருக்காது? அவனை பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் அவனை கண்டித்திருக்கலாம் அவனது செயலுக்கான காரணத்தை விசாரித்திருக்கிலாம். இதுவே ஒரு மத ரீதியான மனிதாபிமானம் என்று நான் நினைக்கிறேன்.
தொடர்ச்சியாக குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இல்லம்.
என்னை பொறுத்தவரை நான் நினைக்கிறேன் அந்த சிறுவன் உளரீதியாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்க கூடும்.
ஏற்கனவே ஏழ்மை சரியாக உணவு கிடைக்கவில்லை முறையான கல்வி கிடைக்கவில்லை என்ற மனஅழுத்தம் அவனிற்குள் இருந்திருக்கும்.
“இங்கிருந்து இனி வெளியே போகவே மாட்டேனா?
இனி என் வீட்டிற்கு என்னால் சிறிய பணத்தை கூட உழைத்து கொடுக்க முடியாதா?
அல்லது நானாக திருடவில்லையே?”
இவ்வாறு பல்வேறு கேள்விகள் அவன் மனதை பாதித்திருக்கலாம் . அது அவன் மன அழுத்தத்தை அதிகரித்திருக்கலாம்.
அதன் காரணமாக சிறுவன் பாதுகாப்பு இல்லத்தில் முறையற்ற செயல்களை செய்திருக்கலாம். அவ்வாறான நிலையில் அவனை அந்த இல்லத்தில் கடமையில் இருந்தவர்கள் கவனமாக கையாண்டு .இருந்திருக்கலாம். ஆத்திரத்தில் நிதானமிழப்பவர்கள் இது போன்ற பராமரிப்பு பணிகளில் இருக்க தகுதியற்றவர்கள்.
நம்முடைய ஊர் பக்கங்களில் பெரியவர்கள் சொல்வார்கள் ‘பிள்ளையை அடிப்பதென்றால் தடியை முறித்து காலுக்கு கீழே அடி’ என்று உண்மை தான் ஒருவரை கட்டுப்படுத்த தாக்குவதென்றால் முழங்காலிற்கு கீழே அடிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில் குறித்த சிறுவனை உடலில் தாக்கிய விதம் மிக மிக தவறு. அவன் முரட்டுதனமாக நடந்து கொண்டிருந்தாலும் கூட அவன் வயதை கருத்திற் கொண்டாவது முழங்காலிற்கு கீழ் அடித்து அவனை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
ஏனென்றால் சிலருடைய கருத்து கைது செய்யப்பட்ட குறித்த காப்பகத்தின் பணியாளர் சிறுவனை அடித்தது தவறில்லை காரணம் சிறுவன் நடந்து கொண்ட விதம் அவ்வாறு இருந்தது என்று. எது எவ்வாறாயினும் காட்டுமிராண்டி தனமாக ஒரு சிறுவனை தாக்கியமை நியாயப்படுத்தக்கூடிய விடயமல்ல.
எல்லாம் முடிந்து விட்டது. கடையில் ஒரு பொருளை வாங்கும் போது மிகுதியாக அதிக பணத்தை கொடுத்தால் அதைக்கூட திருப்பி கொடுத்துவிட்டு போகும் குணமுடைய ஒரு சிறுவன் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்பது நாம் வாழும் சமூகத்தின் சாபக்கேடு.
பொலிஸாரிடமும் நீதிமன்றிலும் நீதி கேட்டு கூச்சலிட முன் நம் நமது செயல்களுக்கு நம்மிடம் நீதி கேட்க வேண்டும். பொறுப்புகளை தட்டிக்கழிப்பதை நிறுத்தி பொறுப்புக்கூறலுக்கு நாம் தயாரா என சிந்திக்க வேண்டும்.
இந்நிலை தொடரக்கூடாது என்பதற்காகவே இத்தனையும்!!
