
தயார்ப்படுத்தல் வேண்டும் – வெளிவிவகார அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்
சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசும் அரச பிரதிநிதிகள், கருத்துக்களை வெளியிடும் முன் உரிய முறையில் தயார்படுத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘ரைசினா கலந்துரையாடலில்’ (Raisina Dialogue), “இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டார்.
இதன்போது, இலங்கையை அண்மித்த கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த விவாதத்தின் போது தானும் சபையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ரஜீவ் அமரசூரிய, அமைச்சர்கள் எப்போதும் வெளிநாட்டுக் கொள்கை அல்லது சர்வதேச உறவுகளில் நிபுணர்களாக இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், சில விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சர்வதேச மேடைகளில் கேட்கப்படக்கூடிய சாத்தியமான கேள்விகள் மற்றும் இக்கட்டான சூழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்துவது வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகங்களின் பொறுப்பாகும்.
குறிப்பாக, பிரபல ஊடகவியலாளர் பல்கி சர்மா விவாதத்தை வழிநடத்தியபோது, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என்பது முன்கூட்டியே கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
முறையான தயார்படுத்தல்கள் இல்லாதபோது, சர்வதேச அரங்குகளில் நாட்டின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

