எரிபொருள் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : பல்கலைக்கழகங்களை மூடியது பங்களாதேஷ்!!
மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, மோசமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால், பங்களாதேஷ் அரசு பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிப்பதற்கான அவசர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும், இன்று திங்கட்கிழமை முதல் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இந்த நடவடிக்கை, மின்சார நுகர்வைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிபொருள் விரயத்தை தடுக்க வழிவகுக்கும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகங்கள், குடியிருப்பு மண்டபங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் குளிரூட்டிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் அதிக அளவு மின்சாரத்தை இதன்மூலம் சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது”, என்று பங்களாதேஷ் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அனுப்பிய உத்தரவில் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புனித ரமழான் மாதத்திற்காக, அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் ஏற்கனவே விடுமுறையில் உள்ளன.
95 சதவீத எரிசக்தி தேவைகளுக்கு, இறக்குமதியை நம்பியுள்ள பங்களாதேஷ், கடந்த வெள்ளிக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.
பரந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்த காலகட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களையும், அவற்றின் செயற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு, பங்களாதேஷ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
“நுகர்வைக் குறைக்கவும், மின்சாரம், எரிபொருள் மற்றும் இறக்குமதி விநியோகங்களில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்”, என்று மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதியை உறுதிப்படுத்தவும், விநியோகத்தை நிர்வகிக்கவும் அதிகாரிகள் பணியாற்றும் அதே வேளையில், இதுபோன்ற நடவடிக்கைகள் மின்சார துறைக்கு குறுகிய கால நிவாரணத்தை அளிக்கும் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், எரிசக்தி நெருக்கடி தொடர்ந்தால் கல்வி நாட்காட்டியில் நீடித்த இடையூறுகள் மாணவர்களுக்கு சவால்களை உருவாக்கக்கூடும், என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மின் உற்பத்தியில் முன்னேற்றம் காணப்பட்டால், தற்போது வழங்கப்பட்டுள்ள பண்டிகை விடுமுறைக்குப் பிறகு, கல்வி நிறுவனங்கள் இயல்பாக இயங்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கூட, தற்போது கல்வி நிறுவனங்களை மூடுமாறு வழங்கப்பட்டுள்ள உத்தரவு எதுவரை நீடிக்கும் என்று, அதிகாரிகள் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

