
மரத்தில் தொங்கவிடப்பட்ட பொலித்தீன் பைக்குள் கைக்குண்டு : வீதி துப்புரவு பணியாளர் கைது
காலி வீதிக்கும் டூப்ளிகேஷன் வீதிக்கும் இடையில் பௌத்தலோக மாவத்தையில் 154 பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட பொலித்தீன் பைக்குள் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வீதி துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த பொலித்தீன் பையில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, துப்புரவுத் தொழிலாளியே பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, ஜனவரி 2ஆம் திகதி இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த நபரே கைக்குண்டை மரத்தின் மீது பைக்குள் வைத்துள்ளதாகவும், பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொழில் நிமித்தம் மொரந்துடுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாகவும், வீதியில் இரும்பு உருண்டை ஒன்றை கண்டெடுத்ததாகவும் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், அது கைக்குண்டு என சக ஊழியர் ஒருவர் தெரிவித்ததையடுத்து, பௌத்தலோக மாவத்தையில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அதனை வைத்துள்ளார்.
65 வயதுடைய நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.