தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2026 – 2029 ஆண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வஜன வாக்குரிமை என்பது மக்களின் உரிமையாகும். அந்த உரிமையை பாதுகாப்பதே இவ்வாறான மூலோபாய விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். மேலும் மக்களின் கருத்துக்களைப் பெற்று, அடுத்து வரும் தேர்தலை நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடாத்துவது எமது கடமையாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

இந்த நாட்டில், வெகுசனங்களோடு, தொடர்பாடல் செய்வதும், மிகப்பெரிய நிகழ்வுகளை நடத்துவதும், இலங்கை தேர்தல்கள் திணைக்களம் மட்டுமேயாகும்.

வர்த்தக நோக்கத்தோடோ, போட்டி தன்மையோடோ இயங்காமல், முழுக்க முழுக்க மக்கள் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவது தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவாகும் என மேலு‌ம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, செயல்பாட்டின் விளக்கம், 2026-2029 மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், அதன் செயல்பாடுகள் பங்குதாரர்களுக்கு எவ்வாறு பொருத்தமானவை மற்றும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களை வழங்குதல், மற்றும் 2026 – 2029 திட்டத்தைத் தயாரிப்பதற்கான செயல்முறை போன்ற பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டன.

மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் தக்க பதிலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார, மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.கே. டி. நெரஞ்சன், அரச உயரதிகாரிகள், மகளிர் சங்க செயற்பாட்டாளர்கள், இளைஞர் சங்க செயற்பாட்டாளர்கள், மீனவர் சங்க செயற்பாட்டாளர்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.