UAE இல் இருந்து தமது அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அவுஸ்திரேலியா
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள தமது அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு, அவுஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான எங்கள் பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம், என்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வோங் தெரிவித்தார்.
வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வதற்கு எதிராக தமது குடிமக்களை எச்சரிக்கும் வகையில், அவுஸ்திரேலியா தனது பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், பல வளைகுடா நாடுகளில் பதட்டங்களை அதிகரித்து வான்வெளியை சீர்குலைத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
