
மட்டக்களப்பில் கொத்து ரொட்டி வழங்க தாமதமானதால் தலைக்கவசத்தால் தாக்குதல்!
மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில், கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது, மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதல் நடாத்திய குழுவினர் தப்பி ஓடிய சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணிக்கு, உணவகத்துக்கு சென்ற குறித்த குழுவினர் கொத்து ரொட்டி ஓடர் செய்துள்ளனர்.
கொத்து ரொட்டியை தயாரித்து வழங்க தாமதமாகியதாக தெரிவித்து, கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது, மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அவரது தலையில் தாக்குதல் நடாத்திவிட்டு அந்த குழுவினர் தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர், மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதலை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
