வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் : எச்சரிக்கை
வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் : எச்சரிகை
இலங்கையில் உள்ள அரசு வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது மட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய அபாயங்கள் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனிய செயற்பாட்டாளர் சிவா தர்மலிங்கம் அறைகூவல் விடுத்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1979 களில் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் மக்கள் விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக நாட்டை விட்டு வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
தற்போது நாட்டுக்கு வருகை தந்த போது இலங்கையில் வாழும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.
நான் அறிந்த வகையில் அரசாங்கம் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் மற்றும் இலங்கையில் வாழும் மக்களிடம் சலுகைகளை வழங்கி வங்கியில் பணங்களை வைப்பிலிட செய்யும் தந்துரோபாயத்தில் இறங்கி உள்ளது.
அரசாங்கம் தற்போது செல்லும் நிலையை விட எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது வங்கிகளில் வைப்பிலிட்டவர்களின் பணங்களை அவர்கள் நினைத்த மாதிரி வங்கிகளில் இருந்து ஒரே தடவையில் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மக்களை வாட்டி வதைத்த ராஜபக்ச அரசாங்கத்தை மக்கள் புரட்சியின் மூலம் மக்கள் வீட்டுக்கு அனுப்பியமை இவ் வருடத்தில் இடம் பெற்ற மகிழ்ச்சியான சம்பவமாகும்.
இந்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்திய ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணைய அல்லாத ஜனாதிபதியாவார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது அதனை தீயிட்டு கொளுத்திய ரணில் விக்கிரமசிங்கவுடனே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசுகிறது.
ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மக்களை அகல பாதாளத்துக்கு இட்டுச் செல்கின்ற நிலையில் மக்கள் தற்போதைய அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஆகவே நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டாத மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.