
-சபீனா சோமசுந்தரம்-
சர்ச்சையை ஏற்படுத்தும் ‘தேவதாசி’ என்ற வார்த்தை பேசத்தகாத ஒரு வார்த்தையா? ‘தேவதாசிகள்’ என்போர் பிழையான கண்ணோட்டத்திற்குரியவர்களா?
இறைவன் சன்னிதியில் கலை வளர்த்த ஒரு இனம் இன்று கேவலமாக பார்க்கப்படுவது ஏன்?
‘தேவரடியார்’ என்ற கண்ணியமான ஒரு சொல் மருவி இன்று பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கொச்சையாகக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது ஏன்?
தற்போது ‘தேவதாசிகள்’ ‘தேவரடியார்கள்’ என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் கற்பிக்கப்படும் அர்த்தம் உண்மை தானா?
கலைக்காக அர்பணிக்கப்பட்ட பெண்களை பணபலமும், செல்வாக்கும் படைத்த சமூகமொன்று உணர்வு மற்றும் உடல் ரீதியாக வன்கொடுமை செய்து, ‘தேவதாசி’ என்ற வார்த்தையையே ஒரு தவறான கண்ணோட்டத்திற்கு இட்டுச் சென்ற கதைப்பிண்ணனி ஒன்று உண்டு.
இன்னல்களுக்கு நடுவே கலை வளர்த்த ஒரு பெண் கூட்டம் தான் இந்த தேவதாசிகள்
ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றிய தேவதாசிகள் உருவான கரு கி.பி.ஆறாம் நூற்றாண்டில் உருவானதாக சொல்லப்படுகின்றது.
‘தேவதாசி’ என்ற சொல் ஒரு வடமொழிச் சொல் என்று குறிப்பிடப்படுகின்றது. கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை பழக்கத்தில் இருந்துள்ளது எனக் கூறப்பட்டாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மிகப் பழமையான காலத்திலேயே தேவதாசி முறை இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் எனக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரித்தில் நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்தது.
திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், இறைவனையே தம் தலைவனாக ஏற்றுக் கொண்டு ஆலயத்திலேயே தங்கி, கோவில் வேலைகளை கவனித்துக் கொண்டனர். விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், கலைகளை கற்பித்தல் போன்ற சேவைகளையும் புரிந்தனர்.
தேவதாசி என தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணானவள் வேறெந்த ஆடவருடனும் உறவு வைக்காது தூய்மையானவளாக இருக்க வேண்டும். ஆடல், பாடல், அலங்காரம் உட்பட கலைகள் அவளுக்கு பயிற்றுவிக்கப்படும். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு ‘பொட்டுக் கட்டுதல்’ என்ற சடங்கு இட்ம்பெறும்.
இந்த “பொட்டுக் கட்டுதல்” நிகழ்வானது ஒரு தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகும்.
தேவதாசிகள் என்போர் ஒரு குறிப்பிட்ட இனத்தையோ சமூகத்தையோ சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவது தவறு.
அநேகமாக அந்நாட்களின் வீட்டில் மூத்த பெண் இவ்வாறு தேவதாசியாக கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயங்களில் தேவதாசிகள் புனிதமான கடமைகளை செய்து வந்தனர்.
காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி செய்வது இவர்களுடைய முக்கிய பணியாக இருந்தது. அத்துடன் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்து வந்தார்கள்.
அத்துடன் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்புவரை தேவதாசிகள் ஆலய கருவறை வரை சென்று வந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆலயத்தில் பணிபுரியும் ஒரு தேவதாசி இறந்துவிட்டால் அவளது உடலை ஆலய மூல மூர்த்திக்கு போர்த்தப்படும் புனித ஆடையை போர்த்தியே எடுத்துச் செல்வார்களாம்.
அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தப்பட்டு அவளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முன், ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன் சிறிது நேரம் ஊர்வலம் நிறுத்தப்படுமாம் மேலும் அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரிக்கப்பட்டாள் என்று சொல்லப்படுகின்றது.
தேவதாசிகளது வாழ்க்கையை ‘கடவுளின் மனைவி’ என்று விளக்கியிருக்கிறார் பிரடரிக் ஏ.மார்க்லின் என்ற மனிதவியல் ஆய்வாளர்
‘பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே’ என்று மார்க்லின் மேலும் குறிப்பிடுகின்றார்.
இப்படி சிறப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த தேவதாசிகள் பின்னர் ஏன் ஒரு அவமானச்சின்னமாக பார்க்கப்பட்டனர்? அவர்களின் வாழ்க்கை ஏன் கேவலமாக பேசப்படும் ஒரு நிலைக்குச் சென்றது.
கோவிலில் இறைவன் முன்னால் நடனம் ஆடிய தேவதாசிகள், காலம் செல்ல செல்ல நாட்டை ஆளும் மன்னர்கள் முன்னாலும் ஆடலாம் என்று சம்பிரதாயம் தளர்த்தப்பட்டது.
ஆரம்பத்தில் வீட்டில் மூத்த பெண்ணை தேவதாசியாக கோவிலுக்கு நேர்ந்துவிடும் பழக்கம் இருந்து வந்த நிலையில், காலம் செல்ல செல்ல சிலர் தமது வீட்டுப் பெண்களை தேவதாசியாக விட விரும்பவில்லை.
ஆகவே, இப்படியானவர்கள் வறுமையில் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளை பணம் கொடுத்து வாங்கி, தமது குடும்பம் சார்பாக கோவிலில் தேவதாசியாக நேர்ந்து விட்டதாக சொல்லப்படுகின்றது.
பணத்தை பெற்றுக் கொண்டு விலைபோன பெண்கள் என்பதால், அவர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். பணக்கார முதலாளிகள் முன்னாலும், அவர்களது வீட்டு விருந்தினர்கள் முன்னாலும் நடனம் ஆடவும், மேற்கொண்டு அவர்களது உடல் தேவைகளை நிறைவேற்றவும் இந்த தேவதாசி பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஊர்வலம் சென்று திரும்பும் உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் உரிமை தேவதாசிக்கு வழங்கப்பட்டிருந்ததாம்.
தேவதாசிகள் புனிதமானவர்களாக இல்லாதிருந்திருந்தால் கலாச்சாரம், பண்பாடு என்பவற்றுக்குள் ஊறிப்போயிருந்த அன்றைய சமூகம், அந்த கௌரவத்தை தேவதாசிகளுக்கு வழங்குவதை ஏற்றுக்கொண்டிருந்திருக்குமா?
மரியாதைக்குரிய தேவதாசிகளின் வாழ்க்கை பணக்கார மனித இனத்தின் காம இச்சையால் கேவலமாக மாற்றப்பட்டது. பாலியல் தொழிலுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட தேவதாசிகளுக்கு பிறந்த குழந்தைகளும் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கப்பட்டனர்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொழில் செய்தே தமது வயிறு வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே போல் தேவதாசிகள் வயதாகியவுடன் பிச்சை எடுத்தே தமது வாழ்நாளை கழித்தனர்.
“ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்து வைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.’ இவ்வாறு ‘தாசிகள் மோசவலை’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1883 பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டு தேவதாசியாக கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, “தேவதாசி” என்ற ஒன்றை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ‘தாசிகள் மோசவலை’ எனும் நாவலை எழுதி 1936 ஆண்டு வெளியிட்டார்.
மொத்தத்தில் வறுமை என்பதே ‘தேவதாசிகள்’ என்ற புனிதத்தை கேவலமாக மாற்றியது.
இன்று இந்த ‘தேவதாசி’ முறை ஒழிக்கப்பட்டாலும், அதை நினைவுபடுத்தும் விதமாக கொஞ்சைப்படுத்தி அந்த வார்த்தையை பெண்கள் மீது உபயோகிப்பது நிற்கவில்லை.
அத்தோடு பிறந்த குழந்தை முதற்கொண்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் ஓயவில்லை.
Source :- ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ நூல்


