
கழுத்தில் மலைப்பாம்பைச் சுற்றிக்கொண்டு போட்டியில் பங்கேற்ற அழகியை கைது செய்ய உத்தரவு!
பிரபல சிகையலங்கார நிபுணர் சந்திமால் ஜயசிங்க ஏற்பாடு செய்திருந்த ‘சித்திரைப் புத்தாண்டு அழகன் – அழகி’ தெரிவு விழாவில், மலைப்பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன, வனவிலங்குத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
வனவிலங்குத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டைப் பரிசீலித்த நீதவான், நெத்மி ஹிரன்யா என்ற சந்தேகநபரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.
மலைப்பாம்பு இலங்கையில் பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினமாகப் பெயரிடப்பட்டுள்ளது. அதனை கழுத்தில் போட்டுக்கொண்டு துன்புறுத்தியமைக்காக குறித்த இளம்பெண் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வனவிலங்கு அலுவலகத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு முன்னரே உத்தரவிடப்பட்டிருந்தும், அவர் அதனைத் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொழும்பு – கருவாத்தோட்டம் (Cinnamon Gardens) பகுதியில் உள்ள ‘ரோயல் மாஸ் எரீனா’ (Royal MAS Arena) வளாகத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (Flora and Fauna Protection Ordinance) கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, குறித்த பெண்ணைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதவான், இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான சந்திமால் ஜயசிங்கவிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார்.
