மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -சேருநுவர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த, வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு, துவிச்சக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு, சேருநுவர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வேல்ட் விசன் நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்ட இவ் உதவித்திட்ட நிகழ்வானது, சேருநுவர பிரதேச செயலாளர் எம்.யூ.நிசாந்த தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சேருநுவர பிரதேச செயலக பிரிவிலுள்ள, 16 கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 மாணவர்களுக்கு, துவிச்சக்கர வண்டியும், 157 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டியையும், கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர், வேல்ட் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.அநுராஜ், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சேருநுவர பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.