
மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றுக்கு புதிய கணினி மையம் அமைத்து கொடுத்த விமானப்படையினர்
விமானப்படையினால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக முழுமையாக பொருத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப கணினி மையம் நேற்று திங்கட்கிழமை அன்று கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கற்றல் சூழலை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில் 15 டெஸ்க்டாப் கணினிகள், யுபிஎஸ் அமைப்புகள் மற்றும் இணைய வசதிகள் போன்றவை உள்ளடங்கப்பட்டுள்ளன .
இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கணினி வசதிகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும்.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல கிராமப்புற பள்ளிகளில் இந்தத் செயல்திட்டத்தினை நிறுவ இலங்கை விமானப்படையால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தேவையான கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி சங்கம் வழங்கியது.
மேலும் கணினி வசதியின் திறப்பு விழாவில் விமானப்படை, மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், குரூப் கேப்டன் சானக சூரியஆராச்சி, விமானப்படை அதிகாரிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சகிதம் கலந்து கொண்டனர்.
