மோடியின் வருகையை முன்னிட்டு : அனைத்து தெருநாய்களும் அகற்றப்படும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக விலங்கு மக்கள் தொகை மேலாண்மைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளார். ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தவும், இலங்கை ரயில்வே துறையின் கீழ் இந்திய அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்கவும் அவர் அநுராதபுரம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் மற்றும் நகராட்சி ஆணையருடன் கூட்டு விவாதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஆலோசகர் வைத்தியர் சமித் நாணயக்கார் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நகராட்சி மன்றத்தின் ஆதரவுடன் ஐந்து வருட செயல்பாட்டுத் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்; நாணயக்கார தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அனுராதபுரத்தில் விசர்நாய்க்கடி தொடர்பான எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு விவாதம் நடத்தப்பட்டதாகவும் , இதைத்தொடர்ந்து நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் கூட்டத்தின் போது, தெருநாய்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியப் பிரதமர் அநுராதபுரம் நகரத்தை விட்டு வெளியேறும் வரை இரண்டு நாட்களுக்கு நாய்கள் மற்றும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் விலங்குகளை வீதிகளில் விடுவிக்க வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.