பல மாதங்களின் பின் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளம் கிடைக்காமையினால் கடந்த சில மாதங்களாக உற்பத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால், பயனாளிகளுக்கான விநியோகமும் நாடு முழுவதும் சீரற்ற நிலையில் காணப்பட்டது.

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நேரடித் தலையீட்டின் கீழ், அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரச வர்த்தகப் பல்வகை கூட்டுத்தாபனத்துடன் அண்மையில் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்:

தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக தற்போது 24 மணிநேரமும் உற்பத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத இறுதிக்குள் திரிபோஷா கிடைக்காத அனைத்து பயனாளிகளுக்கும் விநியோகிக்கும் வகையில், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் எவ்விதத் தடையுமின்றி விநியோகத்தைத் தொடரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக நிலவிய விநியோகப் பற்றாக்குறைக்கு இதன் மூலம் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.