ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியுதவியுடன், தம்புள்ளை–சிகிரியா சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிலையான சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சுற்றுலா தலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுற்றுலாத்துறையின் போட்டித்திறனை அதிகரித்தல், நகர்ப்புற சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தாங்குதிறன் கொண்ட சுற்றுலா மையங்களை உருவாக்குதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். அனைவரும் எளிதாக அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சுற்றுலா சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
முதற்கட்டப் பணிகளின் கீழ் தம்புள்ளை புதிய நகர பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், சியவசம மாவத்தை புனரமைத்தல், சிகிரியா குளத்தை அபிவிருத்தி செய்தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனத் தரிப்பிடத்தை மேம்படுத்துதல் மற்றும் சிகிரியா அருங்காட்சியக வளாகம் மற்றும் திறந்தவெளி அரங்கத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்த மதிப்பு 1,206 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாபகல, பிடுரங்கல மற்றும் களுதிய பொக்குண தொல்லியல் தளங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி, ராமகலே முதல் தல்கோட்டே வரையிலான 11 கிலோமீற்றர் பாரம்பரிய நடைபாதை அபிவிருத்தி உள்ளிட்ட பணிகளும் இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளுக்கான ஒப்பந்த காலம் 30 மாதங்களாகும்.










