
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி டுபாய்க்கு தப்பியோட்டம்
கொழும்பு-கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை காலை முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாக்கிய 24 வயதுடைய கார் சாரதி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற அதே நாளில் சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் தனது சொகுசு காரை முச்சக்கரவண்டியின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காரில் பயணித்த பெண் ஒருவர் விபத்தை நேரில் பார்த்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது சந்தேகநபர் மற்றும் பெண் உட்பட இருவர் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
